பெருநாளும் இன ஐக்கியமும்
(அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்)
இலங்கை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்வதனால் பிற சமூகங்களுடன் நல்லுறவை கட்டியெழுப்பவும் இனமுறுவல்களைத் தவிர்க்கவும் பெருநாள் காலங்களில் பின்வரும் அம்சங்களைக் கருத்திற்கொள்வது வரவேற்கத்தக்கது :-
இனமுறுவல்களைத் தவிர்க்க......
1. ஷவ்வால் பிறை கண்டதும் அல்லது பெருநாள் தினத்தில் பட்டாசு கொழுத்துவதை முற்றாகத் தவிர்ப்பது.
2. முஸ்லிம்கள் தமது வீடுகளிலுள்ள தொலைக்காட்சி மற்றும் வானொலிப் பெட்டிகளது சத்தங்களை அயல் வீட்டாருக்கு தொந்தரவின்றி குறைத்துக் கொள்வது.
3. உறவினர் களது அல்லது நண்பர்களது வீடுகளுக்கு வாகனங்களில் சென்றால் அந்த வாகனங்களை உரிய இடங்களிலும் முறையாகவும் நிறுத்துவது.
4. பெருநாள் சுற்றுலாக்களின் போது மிதமிஞ்சிய கேளிக்கை, ஆடம்பரம், வீண்விரயம் பிறரது ஆத்திரத்தைத் தூண்டும் நடவடிக்கைகளை முற்றாக தவிர்ப்பது
நல்லுறவைக் கட்டியெழுப்ப.....
1. பெருநாள் தினத்திலும் தொடரும் நாட்களிலும் முஸ்லிம் அல்லாதவர்களை வீட்டுகளுக்கு அழைத்து விருந்தளிப்பதும் அன்பளிப்புக்களைப் பரிமாறுவதும்
2. வீடுகளுக்கு அழைப்பதில் சிரமங்கள் இருந்தால் அவர்களது வீடுகளுக்குச் சென்று அவற்றைக் கையளிப்பது.
3. விருந்து பரிமாறும் போதும் அன்பளிப்புக்களை வழங்கும் போதும் இன்முகதோடும் நற்புறவோடும் உரையாடும் அதேவேளை மார்க்கத்துக்கு முறணான வார்த்தைப் பிரயோகங்களையும் செயல்களையும் தவிர்ப்பது.
4. பிரதேச மத குருக்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள்,கிராம சேவையாளர்கள் போன்றவர்களுக்கு முஸ்லிம் ஊர்களில் விஷேட பெருநாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து சிற்றுரைகளை நிகழ்த்துவதும் அங்கு இனிப்புப் பண்டங்களப் பகிர்வதும்
5. முஸ்லிம் உத்தியோகத்தர்கள்,அதிகாரிகள் பெருநாள் முடிந்து தத்தமது காரியாலயங்களுக்கு வேலைக்குத் திரும்பும் போது பெரு நாள்(அவுருது)என்ற பெயரில் இனிப்பு மற்றும் உணவுப் பண்டங்களைப் பகிர்வது
6. சைக்கிளோட்டம், கால்பந்து, கிரிகட், கரப்பந்து,எல்லே போன்ற கூட்டான விளையாட்டுப் போட்டிகளை பிற சமயத்தவர்களோடு இணைந்து ஒழுங்கு செய்யலாம்.இந்த நிகழ்வுகளின் போது ஆண்-பெண் கலப்பு போன்ற மார்க்கத்துக்கு முரணான கார்யங்கள் இடம்பெறாத வண்ணம் இஸ்லாமிய வரம்புகளைப் பேணிக்கொள்வது அவசியமாகும்.
இவை சிறுபான்மை முஸ்லிம் சமூக அமைப்பில் பெருநாட்களின் ஊடாக சகவாழ்வை அடைந்து கொள்ள கடைப்பிடிக்க முடியுமான ஒழுங்குகளாகும்.
எமக்குள் நாம்…
1. தாய் தகப்பன் உறவுகளைப் புத்துப்பித்து பலப்படுத்துவோம்!
2. இனபந்துக்களது வீடுகளுக்குச் சென்று குசலம் விசாரிப்போம்!
3. அயல் வீட்டாருக்கு அன்பளிப்பு பரிமாறுவோம்!
4. ஊரிலும் அயல் ஊர்களிலும் உள்ள அனாதைகள்,ஏழைகள், விதவைகள்,பண வசதியற்ற நோயாளிகள்,அங்கவீனர்கள்,இயற்கை அனர்த்தங்களாலும் 30 வருட யுத்த்ததால் பாதிக்கப்பட்டு இன்னும் நிர்க்கதியான நிலையில் இருப்பவர்கள் போன்றோருக்கு அன்பையும் பணத்தையும் பொருட்களையும் கொடுத்து உதவி செய்து அல்லாஹ்வின் அருளையும் நன்மைகளையும் பெற்றுக் கொள்வோமாக!
5. சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் உம்மத்தின் விமோசனத்துக்காக வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்!
6.எமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான தொடர்பை பாவங்களை தவிர்ப்பதன் மூலமும் நல்லமல்களில் சம்பந்தப்படுவதன் மூலமும் பலப்படுத்திக் கொள்வோம்.!
யா அல்லாஹ் எம் அனைவரையும் பொருந்திக் கொள்வாயாக!
