மிஃராஜ் எனும் வின்னுலக யாத்திரை
நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி ஒரு புறம் வெற்றி மறுபுறம் கொடுமைகள் என்ற இரண்டிற்கும் இடையில் உள்ள பாதையை பிளந்து சென்றுக் கொண்டிருந்தது .அப்போது நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டது இஸ்ரா எனவும் அங்கிருந்து விண்ணுலகிற்கு அழைத்துச் செல்லப்பட்டது இஸ்லாமிய வரலாற்றில் " மிஃராஜ் " எனவும் அறியப்படுகிறது. இந்தப் பயணம் நபித்துவம் பெற்று 11 ஆண்டுகளுக்கு பிறகு ஓர் இரவு வேளையில் கஃபாவின் சுற்று சுவராகிய ஹதீம் என்ற இடத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன் அன்னாரின் நெஞ்சு பிளக்கப்பட்டு ஸம் ஸம் நீரால் கழுவப்பட்டு பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தினால் அது நிரப்பப்பட்டது .இவ்வாறு இதற்கு முன்னர் அன்னாரது வாழ்வில் 3 விடுத்தங்கள் நடைபெற்றிருக்கிறது .மிஃராஜூடைய சந்தர்ப்பத்தில் இறைவனின் அற்புதங்களைக் கானும் வலிமையை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் .
அடுத்த கட்டமாக நபி (ஸல்) அவர்கள் வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கொண்டு வந்த புராக் எனும் தூய வென்மை நிற வாகனத்தில் ஏறியவராக பைத்துல் மக்திஸை நோக்கி சென்றார்கள் .அங்கு அனைத்து நபிமார்களுக்கும் இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள் .முதலாம் வானத்தை அடைந்ததும் அனுமதி பெற்று , அதிலிருந்து ஆதிபிதா ஆதம் (அலை) அவர்களை சந்தித்து உரையாடினார்கள் .பிறகு முறையாக ஒவ்வாரு வானத்திலும் அனுமதி பெற்று , இரண்டாம் வானத்தில் யஹ்யா (அலை) அவர்களையும் மூன்றாம் வானத்தில் யூசுப் (அலை) அவர்களையும் நான்காம் வானத்தில் இத்ரீஸ் (அலை) அவர்களையும் ஐந்தாம் வானத்தில் ஹாரூன் (அலை) அவர்களையும் ஆறாம் வானத்தில் மூஸா (அலை) அவர்களையும் ஏழாவது வானத்தில் இப்றாஹீம் (அலை) அவர்களையும் சந்தித்து உரையாடினார்கள் .அதன் பின்னர் ஸித்ரதுல் முன்தஹா என்ற இடம் வரை ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் பயனித்தார்கள் .அதன் பின்னர் வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூட அனுமதிக்கப்படாததோர் இடத்திற்கு எழுபதாயிரம் திரைகளை கடந்து நபி (ஸல்) அவர்கள் மாத்திரம் இனையற்ற இறைவனை துனையின்றி சந்தித்தார்கள். அந்த நேரத்தில்தான் ஐங்காலத் தொழுகையும், சூறா பகராவின் கடைசி மூன்று வசனங்களுள் " ஒர் அடியான் எனக்கு இணை வைக்காத காலமெல்லாம் அவனது பாவங்களை மன்னிப்பேன் " என்ற இறைவாக்குறுதியும் அன்னாருக்கு அளிக்கப்பட்டது இப்புனித யாத்திரையின் போதே தான் கட்டளைகளுக்கு வழிப்பட்டவர்களுக்கு சித்தப்படுத்தி வைத்திருக்கும் சுவனத்தையும் , தன்னை நிராகரித்து தனது கட்டளைகளுக்கு மாறு செய்தவர்களுக்காக தயார் படுத்தி வைத்திகுக்கும் நரகத்தையும் அதிலுள்ள வேதனைகளையும் அன்னாருக்கு அல்லாஹ் காண்பித்தான். இது சம்பந்தமாக நபியவர்கள் நவின்ற பல பொன் மொழிகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பல வியக்கத்தக்க விடயங்களை கண்ட பின் தன் பயணத்தை நிறைவு செய்து கொண்டு மண்ணகம் திரும்பினார்கள்.
விண்ணுலக யாத்திரைக்கான முக்கிய காரணங்கள் .
நபி (ஸல்) அவர்கள் அகில உலகத்திற்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள் .ஒரு நாட்டின் அரசன் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை சுற்றுப் பிரயாணம் சென்று பார்ப்பதை போன்று அகிலத்திற்கும் தலைவரான அன்னாருக்கு அனைத்தையும் அல்லாஹுத்தஆலா காட்ட விரும்பினான்.
சுவர்க்கம் , நரகம் இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. சுவனத்தில் பல்வேறு இன்பங்களும் , நரகத்தில் பல வகை துன்பங்களும் இருக்கின்றதென இஸ்லாம் உரைக்கிறது .அதனை கண்கூடாக கண்டவர்கள் யாரேனும் உண்டா ? அல்லாஹ் தனது அன்பு நபிக்கு மாத்திரமாவது காட்டி இருக்கலாமே என்ற ஐயங்களுக்கு தெளிவு கொடுப்பதற்கு நாடினான். யாத்திரை மேற்கொண்ட ஆண்டில் நபி (ஸல்) அவர்களுக்கு பக்கபலமாக இருந்த அன்னாரின் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களும் , அன்பு மனைவி கதீஜா அம்மையாரும் இறையடி சேர்ந்திருந்தார்கள். இதனால் மிக்க மன வருத்தத்துடன் இறைவனை தவிற யாருடைய ஆதரவும் இல்லாத நிலையில் தனக்கு அயலூரான தாயிப் நகரை நோக்கி ஏகத்துவ பிரச்சாரத்திற்கு சென்றார்கள் .அங்கு சென்ற அவர்களை மனிதாபிமானமின்றி கயவர்கள் கல்லாலும், கடும் சொல்லாலும் கண்மணி நாயகத்தை காயப்படுத்தினார்கள். இவ்வாறு துன்பத்துக்கு மேல் துன்பம் கண்ட தன் அன்பரின் துயர் துடைக்கவே வான லோகம் வரவழைத்து அன்னாரின் இன்னல் நீக்கி இன்பக் கடலில் ஆழ்த்தினான் .
பைத்துல் மக்திஸிலிருந்து விண்ணுலக யாத்திரை . மேற்கொண்ட தன் மர்மம்
அல்லாஹு தஆலா தனது படைப்புகள் அனைத்தையும் பைத்துல் மக்திஸ் இருக்கும் இடத்தில் தான் மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான் எனவே நபி (ஸல்) அவர்களின் உம்மத்தை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும் ஏனெனில் அப்பூமியில் அன்னாரின் பாதம் பட்ட பரகத்தினால் அவர்களின் உம்மத்தினர் அந்நாளில் படும் கஷ்டங்களை இலகுபடுத்துவான் .இது தவிர அனைத்து நபிமார்களின் ஆத்மாக்களையும் அவ்விடத்தில்தான்
அல்லாஹு தஆலா ஒன்று சேர்த்து வைத்துள்ளான் .எனவே நபி (ஸல்) அவர்களை அங்கு வரவழைத்து அவர்களுடன் சந்திப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஏனைய நபிமார்களின் ஆத்மாக்களை கண்ணியப்படுத்த நாடினான்.
விண்ணுலக யாத்திரை கனவா நிஜமா ?
விண்ணுலக யாத்திரையை ஜீரணித்துக் கொள்ள முடியாத ஒரு சிலர் அது கனவுதான் என்று கூறுகின்றார்கள் .அது கனவல்ல என்று நிரூபிக்கும் ஆதாரங்கள் பல உண்டு.
கனவாக இருந்தால் அது பெறும் அற்புதமாக இருக்காது. காரணம் கனவில் இது போன்ற நிகழ்வை காண்பது நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு கூட சாத்தியமே .ஆனால் இஸ்லாம் அதனை மாபெரும் அற்புதமாக முன்வைக்கிறது.
அது கனவாக இருந்தால் அதை மக்கா காபிர்கள் இவ்வளவு கடுமையாக மறுத்திருக்க மாட்டார்கள் .மற்றும் ஈமான் கொண்ட சிலர் மீண்டும் மதமாறியிருக்கவும் மாட்டார்கள்.
"இந்த பயணத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என் கையை பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றார்கள்" என நபியவர்கள் கூறிய வார்த்தை தெளிவாகவே புஹாரி கிரந்தத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இஸ்லாம் கூறும் நம்பிக்கை அறிவை மிஞ்சியது. அதனால் இஸ்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட மார்க்கம் என்பது அர்த்தமல்ல .அதே சமயம் சில விடயங்களில் அறிவை தாண்டி நம்பிக்கை முன்னிலைப்படுத்தப்படும். மிஃராஜை அறிவால் அளக்க நினைத்து தட்டுத்தடுமாறி ஈமானை பறிக் கொடுத்தவர்கள் பலர் உண்டு. அல்லாஹு தஆலா நம் அனைவரையும் பாதுகாப்பானாக.
(நவ்பான் நிஸ்தார் )


